புட்டாமாவு

ஒக்ரோபர் 21, 2006

சென்னைல இருக்க கஸின்ஸ்லருந்து ஆரம்பிச்சு எல்லாரும் மைலாப்பூர் தமிழ் பேசுறதால இன்னிக்கும் சென்னைக்கு போனோம்னா அந்த பேச்சும் accentம் தான் இசியா வருது.  ஆனா லீவுக்கு ஊருக்கு போனா சில வார்த்தைகள் வித்தியாசமா இருக்கும்.  அப்படி வித்தியாசமா கேள்வி பட்டிருக்க வார்த்தைகளை எல்லாம் கொஞ்சம் ஞாபகப்படுத்திக்கணும். இப்போதைக்கு உடனே ஞாபகம் வர வார்த்தை, புட்டாமாவு.

 இப்ப எல்லாம் பவுடர் பூசுற வழக்கமே இல்லை, ஆனா ஸ்கூல் படிக்கிற சமயத்தில நல்லா ஸ்கூல் ரெகுலேஷன் படி ரெட்டை ஜடைய இருக்க பிடிச்சு பின்னி வெள்ளை ரிப்பன வச்சு மடிச்சு கட்டி,  நட்சத்திரம் அல்லது நிலான்னு எதாச்சும் ஒரு டிசைன்ல நெத்தில பொட்டு வெச்சு, பத்தாதுக்கு கண்ணத்துல வேற ஒரு பொட்டு வெச்சு, அதுக்கு மேல பவுடர் பூசி படுத்தி வைப்பாங்க.

 இந்த பவுடருக்கு ஊர்ல இருக்க பாட்டி சொல்ற பேரு, ‘புட்டாமாவு’.  சென்னைய விட்டு வெளியூர் வந்ததிலருந்து நம்ம vocabularyயும் எவ்வளவோ மாறி போச்சு, எத்தனையோ வார்த்தைகள் அட நம்ம எப்பவும் சொல்றத விட இது நல்லா இருக்கேன்னு நினைச்சு அப்பப்போ பேசும் போது அந்த வார்த்தைகளை சேத்து பேசினாலும், இந்த புட்டாமாவுங்கற வார்த்தை மட்டும் சொல்ல வரமாட்டேங்குது. இன்னமும் பேச்சு வழக்குல இந்த வார்த்தை இருக்கா என்னன்னு தெரியலை.

Advertisements

அகமாளும் வேலவன்

ஒக்ரோபர் 21, 2006

கலமிருக்கும் சோறெனிலும் கையிருந்து

       கீழ்விழுந்தால் கடும்பசிக்குக் காணா தன்றோ

நிலம்விதைத்த பயிர் கூட நெடிதாய் ஆகி

      நெல்மணியாய் வீடுவரும் திண்ணம் உண்டோ

நிலையான பொருளென்று நிலத்தில் ஒன்று

       நிச்சயமாய் வருமென்று சொல்வார் உண்டோ

மலைவாழும் வேலவனார் மனது வைத்தால்

      மனம்கொண்ட மலராவோம் மைந்தர் நாமே


Diwali vs Deepavalli

ஒக்ரோபர் 21, 2006

தீபாவளியா இல்லை தீவாளியான்னு வருஷாவருஷம் ஒரு பட்டிமன்றம் நடத்துறத வழக்கமா வச்சிருக்காங்க நம்ம வலைப்பதிவர்கள், என்னோவோ தீவாளி வாழ்த்துன்னு சொன்னா அது வடநாட்டு பழக்கம் தீபாவளி வாழ்த்து தான் சொல்லணும்ன்னு எல்லாம் வேற அனல் பறக்குது வருஷம் தவறாம.

 அப்ப ஊர் பக்கம் காலம் காலமா தீபாவளிய தீவாளின்னு சொல்லி  கொண்டாடுற மக்களுக்கு எல்லாம் தமிழ் தெரியாது போலருக்கு?


Chennai Vs Oor

ஒக்ரோபர் 15, 2006

கொஞ்ச நாள் முன்னாடி (யாருன்னு ஞாபகம் வர மாட்டேங்குது) வலைப்பதிவுல ஒரு நல்ல கேள்வி ஒண்ணு கேட்டிருந்தாங்க. சென்னை பூர்வீகம்னு சொல்லிக்கிறவுங்க, குறைந்தது ஒரு மூணு தலைமுறையாவுது சென்னைல குடியிருந்தவுங்க யாராச்சும் இருக்காங்களாங்கறது தான் கேள்வி, இது வரைக்கும் ஆமாம் நாங்க தலைமுறை தலைமுறையா சென்னைக்காரங்க தான்னு யாருமே சொல்லலை. நம்ம எல்லாரும் சென்னைக்கு குடி வந்தவுங்கனா அப்ப ஒரிஜினல சென்னைக்காரங்க எல்லாம் என்ன ஆனாங்க?

 தாத்தா காலத்திலேயே சென்னைக்கு குடி வந்தாச்சு, எங்க அம்மா சித்தி எல்லாம் படிச்சதெல்லாம் சென்னைல தான்னாலும், ஊர்ல என்ன ஒரு விஷேசம்னாலும் எல்லாரும் தவறாம் போய் அட்டெண்டன்ஸ் குடுத்துட்டு வரது வழக்கம்.  இப்படி ஊருக்கும் சென்னைக்குமாக ரோடு போடுற குடும்பங்கள் இருக்குற வரைக்கும் பஸ் கம்பெனிக்காருக்கு கொண்டாட்டம் தான்.  

 ஊருக்கு போனா கொஞ்சம் கலாசாரம் வித்தியாசம் இடிக்கும் நமக்கு அப்ப எல்லாம்.   சில வார்த்தைகள் பழக்க வழக்கங்கள் எல்லாம் வித்தியாசமா இருக்கும். பத்தாதுக்கு நான் யாருன்னு சொல்லு பார்ப்போன்னு quiz programme வைக்கிற மக்கள் வேற. (இப்ப எல்லாம் நானும் அப்படி தான் நடந்துக்குறேன்றது வேற விஷயம்). சென்னைல நெருங்குன சொந்தங்களை தவிர மததவுங்களை எல்லாம் ஒரு உத்தேசமா மாமா மாமி, அக்கா, அண்ணானு கூப்பிட்டா தப்பிச்சுடலாம், ஆனா ஊர்ல போய் இப்படி உத்தேசமா ஒருத்தர் வயச பாத்து எல்லாம் எதாவது ஒரு சொந்தம் சொல்லி தப்பிக்க முடியாது. கரெக்டா சொந்தம் சொல்ல தெரியலையோ மாட்டினோம். 😦

அந்த சமயத்தில ஊர்ல இன்னோரு ஒரு கல்சர் ஷாக் நமக்கு மாவாட்டுறது, இப்ப அங்கேயும் மாறிடுச்சு, ஆனா  நான் சின்ன பொண்ணா இருக்கும் போது ஊருக்கு போனா நல்லா அழகா திருத்தமா செய்யப்பட்ட ஆட்டுக்கல்லு வரிசையா இருக்கும். விசேஷ காலத்தில எல்லா கல்லுலயும் மாவு ஆட்டபடும்  simultaneous-a, சும்மா நாள்ல ஒரு கல்லு மட்டும். பட்டிக்காட்டான் முட்டாய்  கடை பாத்த மாதிரி, சும்மா ஜாலியா இருக்காம நானும் help பண்றேன் பேர்வழின்னு போனேன். இந்த ஊர் பக்கம், கார்ல போகேல குழந்தைங்க ‘are we there yet’ ன்னு நிமிஷத்துக்கு நூறு தபா கேக்குங்களே அந்த மாதிரி நானும் அரைச்சது போதுமான்னு நிமிஷத்துக்கு 4 தடவை கேட்டு பாத்துட்டேன், கொஞ்சம் தண்ணி சேத்து ஆட்டினா ஈசியா இருக்கும்னு அடிக்கடி தண்ணி வேற சேத்து ஆட்டி பாத்தேன். அரை பட்டாதானே அந்த மாவு. கடைசில என் கேள்விக்கு பதில்சொல்ல முடியாம, பத்தாதுக்கு இவ்வளவு தண்ணி சேத்தா வடைஎண்ணைய குடிக்கும், நீ மாவு ஆட்டினது போதும் விடுன்னு சொல்லி கிளப்பி  விட்டுட்டாங்க.  நல்லவேளையா அடுத்த தடவை போனப்ப grinder ல ஆட்டுற fashion அங்கேயும் வந்துடுச்சு.

 தொடரும்…


சண்முக சுப்ரபாதம் (ஒரு பகுதி)

ஒக்ரோபர் 14, 2006

தேன்மணக்கும் தென்பழனித் தென்றலுனைத் தழுவ

சண்முக நல் நதியுன்றன் செம்பாதம் வருட

வான்வளரும் தெவரெல்லாம் வந்துன்னை வணங்க

வளரிசையின் கிம்புருடர் வாத்தியங்கள் முழங்க

கோன்தண்ட பாணியுன்றன் கோலமயில் ஆட

கோடிப்பேர் காத்துள்ளார் கும்பிடவே நாடி

வான்தங்கும் பழனிமலை வாழுகின்ற தேவா

வைகறையில் துயிலெழுவாய் வாழ்த்துகிறோம் பாவால்

உள்ளாரும் அல்லாரும் இருகோடி ஆக

இல்லாமல் ஒன்றாகி இல்லாமை போக

எல்லோரும் எல்லாமும் பெற்று மகிழ்ந்தாட

இனியவனே வேலவனே என்றுன்னைப் பாட

வல்லவனே உன்னருளால் வழியும்செய் வாயே

பெற்றதொரு தந்தையுந் தாயாவாய் நீயே

நல்லவனே சண்முகனே தவசுப்ர பாதம்

நாங்களுனை வேண்டுகிறோம் நற்காலை யாக

பாலின்றிக் கலங்கிமனம் பதைக்கின்ற பிள்ளை

பசிக்கில்லை சோறென்று வாடிடும் பிள்ளை

வேலைகளும் ஏதில்லை வேறுதுணை இல்லை

வேலவனே காத்திடவே வேண்டுமென உன்னை

நாளெல்லாம் வேண்டுகின்ற நல்லடியார் தம்மை

நலிவெல்லாம் போக்கி நல்லவழி காட்டு

வேலுடைய வேந்தனுக்கே தவசுப்ர பாதம்

வேண்டுகிறோம் உன்னடியார் நற்காலை ஆக


மேலை ஊருணிப் பிள்ளையார்

ஒக்ரோபர் 14, 2006

ரொம்ப நாளாவே எல்லாரும் எழுதுறாங்களே நம்மளும் நம்ம பங்குக்கு எழுதி பாத்துடணும்னு நினைப்பு, ஆனா பெரிய தடை நம்ம தமிழ் ஞானம் 😦   கில்லில 2 வரி யோசிச்சு நான் எழுதுற நேரத்தில மத்தவுங்க ஒரு பெரிய thesis ஏ எழுதி முடிச்சாரலாம்.  இந்த அழகுல தமிழ் வலைப்பதிவு ஆரம்பிக்கிறது எல்லாம் தேவை இல்லாத செயல்னு யோசிச்சிட்டு இருந்தப்ப தான் அப்பாவோட எழுத்துக்களை எல்லாம் meyyappan.com பதிவு செய்யறதா போட்டிருந்த திட்டம் ஞாபகம் வந்துச்சு. ஊருக்கு போகும்போது அப்பாவோட சேர்ந்து செய்ய வேண்டிய வேலை அது,  இப்போதைக்கு வேணும்னா சில கவிதைகளையும் நம்மளோட மேண்மையான் அபிப்ராயங்களையும் சேர்த்து எழுதி காலத்தை தள்ளலாமோ? இது எப்படி இவ்வளவு நாள் தோணாம போச்சு.

அப்பாவோட கவிதைகள் முக்கால்வாசி முருகனைப் பற்றியதே, பழனி பாதயாத்திரை சமயத்தில் பாட படுபவை. முடிந்த அளவு எல்லாவற்றையும் சேகரித்து Meyyappan.com ல் பதிவு செய்வதாக திட்டம், அகவே சில கவிதைகள் மட்டுமே இவ்வலைப்பதிவில் என்னோட அதிக பிரசங்கித்தனமான கருத்துக்களோடு பதிவு செய்யப்படும்.

அப்பாவோட பாடல்களில் மிகவும் பிரபலமானது ‘ஆடுக ஊஞ்சல்’ என்னும் பாட்டு,  அந்த பாடலும் அதைப்பற்றிய என் எண்ணங்களும் அடுத்த பதிவில்.  முதல் பதிவுக்கு வம்பே இல்லாம பிள்ளையார் சுழி….

வருவாய் இது சமயம்னு முருகனை துதித்து எழுதிய பாடலில் முதல் பாடலாக எழுதப்பட்ட பாடல் இது. காரைக்குடியில் இருக்கும் மேலை ஊருணி மெய் வீர விநாயகனை வேண்டி எழுதப்பட்ட பாடல்.  இதை படிக்கும் போதே கொப்புடையம்மன் கோவில், பழைய பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், கூட்டம்னு நிறைய ஞாபகங்கள் வருது.  மேலை ஊருணி பிள்ளையார் கோவிலும், கோவிலை சுற்றி இருக்கும் தோட்டமும், ஊருணியும்…. ஊருக்கு ஒரு நடை போய்ட்டு வரணும்.

வாலைத் தமிழ்க்குமரி வாழுகின்ற காரைநகர்

மேலை ஊருணியின் மெய்வீர நாயகனே

வேலைக் கரமேந்தும் வேந்தன் புகழ்பாட

ஏழை எனக்குதவி என்கவிக்கு காப்பாவாய்