தேன்மணக்கும் தென்பழனித் தென்றலுனைத் தழுவ
சண்முக நல் நதியுன்றன் செம்பாதம் வருட
வான்வளரும் தெவரெல்லாம் வந்துன்னை வணங்க
வளரிசையின் கிம்புருடர் வாத்தியங்கள் முழங்க
கோன்தண்ட பாணியுன்றன் கோலமயில் ஆட
கோடிப்பேர் காத்துள்ளார் கும்பிடவே நாடி
வான்தங்கும் பழனிமலை வாழுகின்ற தேவா
வைகறையில் துயிலெழுவாய் வாழ்த்துகிறோம் பாவால்
உள்ளாரும் அல்லாரும் இருகோடி ஆக
இல்லாமல் ஒன்றாகி இல்லாமை போக
எல்லோரும் எல்லாமும் பெற்று மகிழ்ந்தாட
இனியவனே வேலவனே என்றுன்னைப் பாட
வல்லவனே உன்னருளால் வழியும்செய் வாயே
பெற்றதொரு தந்தையுந் தாயாவாய் நீயே
நல்லவனே சண்முகனே தவசுப்ர பாதம்
நாங்களுனை வேண்டுகிறோம் நற்காலை யாக
பாலின்றிக் கலங்கிமனம் பதைக்கின்ற பிள்ளை
பசிக்கில்லை சோறென்று வாடிடும் பிள்ளை
வேலைகளும் ஏதில்லை வேறுதுணை இல்லை
வேலவனே காத்திடவே வேண்டுமென உன்னை
நாளெல்லாம் வேண்டுகின்ற நல்லடியார் தம்மை
நலிவெல்லாம் போக்கி நல்லவழி காட்டு
வேலுடைய வேந்தனுக்கே தவசுப்ர பாதம்
வேண்டுகிறோம் உன்னடியார் நற்காலை ஆக